கொழும்பில் கன மழை: வீதிகள் நீரில் மூழ்கின

கொழும்பு கோட்டையில் அதிக மழை வீழ்ச்சி: வீதிகள் பல நீரில் மூழ்கின 

by Bella Dalima 18-05-2018 | 3:33 PM
Colombo (News 1st) பலத்த மழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் பெருக்கெடுத்ததில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. தலைநகர் கொழும்பில் இன்று அதிகாலை முதல் பெய்துவரும் பலத்த மழை காரணமாக போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் சிலவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை அதிகாரி குறிப்பிட்டார். இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு கோட்டையில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கொழும்பு கோட்டையில் 108. 3 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அநுராதபுரம் - உலுக்குளம் பகுதியில் 50.7 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் தெஹிவளை பகுதியில் 49.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. உடவளவ மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. உடவளவ நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்றும், தெதுரு ஓயாவின் 8 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்னன. இதன் காரணமாக தாழ்நிலப்பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை மேல், தென் மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்கம் குறிப்பிட்டது. இதனால் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமே வானிலை மாற்றத்திற்கு காரணமாகவுள்ளது.  

ஏனைய செய்திகள்