by Bella Dalima 18-05-2018 | 5:24 PM
Colombo (News 1st)
சேவை யாப்பிற்கு அனுமதி வழங்காமை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு விமான நிலைய குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் அடங்கிய பத்திரத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க அமைச்சர் இணக்கம் தெரிவித்ததை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட தீர்மானித்ததாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அருண கனுகல தெரிவித்தார்.
இதற்கான எழுத்து மூல உத்தரவாதம் இன்று பிற்பகல் தமக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அருண கனுகல குறிப்பிட்டார்.
இந்நிலையில், குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்த சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விமான நிலையத்திற்கு சென்ற பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.
அதிகாரிகளின் தொழிற்சங்க நவடிக்கை காரணமாக புறப்படும் நேரத்திற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு ஶ்ரீ லங்கன் விமான சேவை பயணிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.