மக்களுக்காக நீதிமன்றம் செல்லத் தயார்!

பஸ் கட்டணம் அதிகரிப்பு: மக்களுக்காக நீதிமன்றம் செல்லத் தயார் - நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு

by Bella Dalima 17-05-2018 | 8:12 PM
Colombo (News 1st)  பஸ் கட்டணத்தை 12.5 வீதத்தால் அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் 22 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக்க அபேசிங்க தெரிவித்தார். பஸ் கட்டணம் தொடர்பிலான தேசிய கொள்கைக்கு அமைய ஒவ்வொரு வருடமும் ஜூலை முதலாம் திகதி பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு முன்னர் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளமையினால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டும் என பஸ் சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளன. முதற்கட்ட பேச்சுவார்த்தையின்போது 6.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. எனினும், ஆகக்குறைந்த கட்டணத்தில் மாற்றம் ஏற்படாமை மற்றும் சில பஸ் சங்கங்கள் முன்வைத்த அளவிற்கு திருத்தம் மேற்கொள்ளப்பட்டாமையினால் தாம் பஸ் சேவையில் இருந்து ஒதுங்குவதாக முன்பு எச்சரிக்கை விடுத்தன. சில தரப்பினர் 10 வீத பஸ் கட்டண அதிகரிப்பைக் கோரியதுடன், சில தரப்பினர் 20 வீத கட்டண அதிகரிப்பு அவசியம் என தெரிவித்திருந்தனர். பஸ்கள் மூலம் இடம்பெறும் பயணிகள் போக்குவரத்து சேவை தொடர்பிலான தேசிய கொள்கை குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பொறுப்பாகும். எனினும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கருத்துக்களைக் கேட்டறியாமலேயே 12.5 வீத பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார். இதேவேளை, பஸ் கட்டணம் தொடர்பிலான தேசிய கொள்கைக்கு ஏற்ப இந்த கட்டண உயர்வு அநீதியானது என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பஸ் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்தாவிட்டால், மக்களுக்காக தமது சங்கம் நீதிமன்றம் செல்ல தயார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.