குவாத்தமாலாவும் ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது

அமெரிக்காவைத் தொடர்ந்து குவாத்தமாலாவும் ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது

by Bella Dalima 17-05-2018 | 6:25 PM
அமெரிக்காவைத் தொடர்ந்து இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவும் சர்ச்சைக்குரிய ஜெருசலேமில் தூதரகத்தை திறந்துள்ளது. ஜெருசலேமில் புதிதாக கட்டப்பட்டுள்ள குவாத்தமாலா புதிய தூதரக திறப்பு விழா நேற்று (16) நடைபெற்றது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கௌதமாலா அதிபர் ஜிம்மி மாரல்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தமைக்கு குவாத்தமாலாவிற்கு தனது பாராட்டை தெரிவித்துக் கொண்டார். மேலும், அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணமாக குவாத்தமாலாவிற்கு செல்வதாகவும் அறிவித்துள்ளார். ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகத்தை திறக்கும் முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிட்டார். இதற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும், ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது. இதைக் கண்டித்து, காஸா எல்லையில் பாலஸ்தீனர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களைக் கலைக்க இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 60 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, காஸா எல்லையில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல் குறித்து விவாதிப்பதற்கு இஸ்ரேலில் இருக்கும் தனது நாட்டுத் தூதரை துருக்கி உடனடியாக அழைத்துள்ளது. இதேபோல், இந்தத் தாக்குதலை கண்டிக்கும் வகையில், துருக்கிக்கான இஸ்ரேல் தூதரை தற்காலிகமாக வெளியேறும்படி அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலும் ஜெருசலேமில் உள்ள துருக்கி நாட்டின் துணை தூதரை தற்காலிகமாக தங்கள் நாட்டிலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளது.