நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

by Bella Dalima 17-05-2018 | 8:32 PM
Colombo (News 1st)  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை (18) நடைபெறவுள்ளது. நினைவேந்தல் நிகழ்விற்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்காலில் நடைபெற்று வருகின்றன. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை காலை 11 மணிக்கு சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. யாருடைய தலைமைத்துவமும் இல்லாமல் தமிழர் தரப்புகள் ஒன்றிணைந்து நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிக்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கி.கிருஷ்ணமேனன் தெரிவித்தார். இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரத்ததான நிகழ்வு ஒன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்கால் நினைவு தின வார நிகழ்வுகள் அம்பாறை - திருக்கோவிலிலும் இடம்பெற்றது. திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு - கல்லடி கடற்கரையிலும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவுதின வார நிகழ்வுகள் இடம்பெற்றன.  

ஏனைய செய்திகள்