கர்நாடகாவில் எடியூரப்பா மீண்டும் முதல்வரானார்

கர்நாடகாவில் எடியூரப்பா மீண்டும் முதல்வரானார்: எதிர்க்கட்சிகள் தர்ணா

by Bella Dalima 17-05-2018 | 4:25 PM
கர்நாடகாவில் மூன்றாவது முறையாகவும் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். இதன் பிரகாரம், மாநிலத்தின் பாஜக தலைவர் எடியூரப்பா 23 ஆவது முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்ற நிபந்தனையுடனேயே பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியமைத்துள்ளது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு மாநில ஆளுநரால் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 78 ஆசனங்களையும் பாரதிய ஜனதாக் கட்சி 104 ஆசனங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 ஆசனங்களையும் கைப்பற்றின. இதில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 112 ஆசனங்கள் கிடைக்கவில்லை. இதனையடுத்து, காங்கிரஸூடன் இணைந்து மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி கர்நாடகாவில் ஆட்சியமைப்பதற்கு தீர்மானித்திருந்த நிலையில், ஆளுநர் வாலா வாஜ்பாய் - பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். இதன் பின்னணியில் கர்நாடகாவின் முதல்வராக பாரதிய ஜனதாக் கட்சியின் எடியூரப்பா இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஆளுநரின் இந்த செயற்பாட்டிற்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிடும் வகையில் தர்ணா போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.