by Bella Dalima 16-05-2018 | 7:12 PM
Colombo (News 1st)
1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் இராணுவ சுற்றிவளைப்பின் போது 24 பேர் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
யாழ். மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த ஆட்கொணர்வு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹேக்கித்த குணசேகர ஆட்கொணர்வு மனுவை விசாரணை செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்று 22 வருடங்களுக்கு பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, யாழ்ப்பாணத்தில் எந்த பகுதியில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது தொடர்பில் மனுவில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் 1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி நாவற்குழி பகுதியில் இடம்பெற்றதாகவும் அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களையும் அப்போதைய தென்மராட்சி பிரதேச செயலாளர் வழங்கியிருந்த நிலையில், சம்பவம் எங்கு நடந்தது என்பது தொடர்பில் மனுதாரர்கள் கூறுகின்றமையில் முரண்பாடு காணப்படுவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
ஆட்சேபனையை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் அதனை எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, நாவற்குழி படைமுகாமிற்கு பொறுப்பாக இருந்த துமிந்த கெப்படிபொல தலைமையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதென தெரிவித்த மனுதாரர் தரப்பு சட்டத்தரணி இது உண்மைச் சம்பவம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தற்போதும் உள்ளனர் என பெற்றோர் நம்புவதாகவும் மனதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.
ஆகவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், அவ்வாறு யாரும் இலங்கையில் இல்லை எனவும் யாரும் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பின் அவர்களை தானே மன்றத்தில் ஆஜர்படுத்தி அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.
மனுவின் முறைப்பாட்டின் அடிப்படையில், காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இல்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் பிரகாரம், இராணுவ முகாம்களிலோ அல்லது தடுப்பு முகாம்களிலோ இவ்வாறானவர்கள் இல்லை என இராணுவத்தினர் சார்பில் இன்று மன்றில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான எவ்வித சான்றுகளும் இராணுவ முகாம்களில் இல்லை என ஐ.நா தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை , ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்படும் தினத்திலேயே அது தொடர்பில் விவாதத்தை மேற்கொள்ள வேண்டும் என யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.