வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 16-05-2018 | 9:24 PM
Colombo (News 1st)  வேலையற்ற பட்டதாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும், 2017 ஆம் ஆண்டு வரை உள்ள வேலையற்ற பட்டதாரிகளை உள்வாங்க வேண்டும், பட்டச்சான்றிதழ் பெறும்போதே அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் நியமனம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பேரணியாகச் சென்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றிணைக் கையளித்தனர். அம்பாறை மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை உதவி அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகளும் இன்று மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்தனர். வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுவதாக அரசியல்வாதிகளால் பல தடவைகள் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு இன்று வரை எட்டக்கனியாகவே உள்ளது.  

ஏனைய செய்திகள்