அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டண விபரம்

அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டண விபரம்

by Staff Writer 16-05-2018 | 9:10 AM
COLOMBO (News 1st) பஸ் கட்டணம் இன்று முதல் 6.56 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் குறைந்தபட்ச 10 ரூபா பஸ் கட்டணத்தில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதற்கு மேலதிகமான தொகை முதல் 305 ரூபா வரையுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில் அதிக பட்ச கட்டணமாக 733 ரூபா பஸ் கட்டணம் 781 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 13 ,17 மற்றும் 21 ரூபாய்களாக இருந்த பஸ் கட்டணங்கள் ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் 25 ரூபா முதல் 34 ரூபா மற்றும் 38 ரூபாவாக இருந்த பஸ் கட்டணங்களில் இரண்டு ரூபா அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது. 35 ரூபா, 40 ரூபா, 45 ரூபா, 48 ரூபா, 53 ரூபா, 55 ரூபா, 60 ரூபாவாக இருந்து வந்த பஸ் கட்டணங்கள் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 42 ரூபா, 57 ரூபா, 62 ரூபா, 64 ரூபா, 67 ரூபாவாக இருந்து வந்த பஸ் கட்டணங்கள் 4 ரூபாவால் அதிகரிக்கப்ட்டுள்ளது. இதேவேளை 69 ரூபா, 71 ரூபா, 76 ரூபா, 81 ரூபா, 86 ரூபா வரையான பஸ் கட்டணங்களிற்கு 5 ரூபா அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 73 ரூபா, 78 ரூபா, 83 ரூபாவாக இருந்த பஸ் கட்டணங்கள் 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 6.56 வீத பஸ் கட்டண அதிகரிப்பு போதுமானதாகவில்லை என்பதால் 20 வீத பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாவிடின் இன்று நள்ளிரவு முதல் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பஸ் உரிமையாளர்கள் சங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.