இரணைத்தீவில் குடியேற 190 குடும்பங்களுக்கு அனுமதி

இரணைத்தீவில் குடியேற 190 குடும்பங்களுக்கு அனுமதி

by Bella Dalima 15-05-2018 | 9:19 PM
Colombo (News 1st)  கிளிநொச்சி - இரணைத்தீவில் குடியேறுவதற்கு 190 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காணி உரித்துடைய குடும்பங்கள் அங்கு குடியேற முடியும் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுரேஸ் பொன்னையா தெரிவித்தார். காணி உரிமத்தில் ஏதேனும் பிணக்குகள் காணப்படுமாயின் அவற்றை நிவர்த்திப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுரேஸ் பொன்னையா , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பூநகரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் இன்று இரணைத்தீவிற்கு சென்றிருந்தனர். மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஷ் இரணைத்தீவில் தங்கியுள்ள மக்களை சந்தித்த போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் டி.கனகராஜ் உள்ளிட்ட குழுவினர் இன்று இரணைத்தீவில் தங்கியுள்ள மக்களை சந்தித்தனர். இவர்களுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஆர். ராஜபக்ஷ, யாழ். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க உள்ளிட்ட குழுவினர் இரணைத்தீவு மக்களை சந்தித்தனர். யுத்தம் காரணமாக 225 குடும்பங்கள் 1992ஆம் ஆண்டில் இரணைத்தீவிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அங்கிருந்து வெளியேறிய மக்கள் இரணைமாதா எனும் புதிய கிராமமொன்றை உருவாக்கி அங்கு குடியேறினர். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து இரணைத்தீவு மக்களும் தமது பூர்விக நிலத்தில் மீள்குடியேற வேண்டுமென தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்தனர். 1992 ஆம் ஆண்டு இரணைத்தீவிலிருந்து வெளியேறிய தம்மை மீள் குடியமர்த்துமாறு இவர்கள் 359 நாட்களுக்கும் மேலாக சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரணைத்தீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும், காணி விடுவிப்பு தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், கடந்த மாதம் 23 ஆம் திகதி இரணைத்தீவை பூர்வீகமாகக் கொண்ட 360 பேர் இரணைத்தீவை நோக்கி சென்றனர். அவர்களில் சிலர் நிரந்தரமாக அங்கு தங்கியுள்ளதுடன் சிலர் தொழிலுக்காக வந்து சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே இன்று இரணைத்தீவில் தங்கியுள்ள மக்களை சந்தித்த மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் 190 குடும்பங்கள் அங்கு நிரந்தரமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கினார். இது குறித்து இரணைத்தீவு மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.