மற்றுமொரு பிரித்தானிய ரக்பி வீரர் உயிரிழப்பு

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு பிரித்தானிய ரக்பி வீரர் உயிரிழப்பு

by Bella Dalima 15-05-2018 | 4:30 PM
Colombo (News 1st)  சிநேகப்பூர்வ ரக்பி போட்டிகளில் பங்கேற்பதற்காக நாட்டிற்கு வருகை தந்து, சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெட் தோமஸ் ரீட் என்ற வீரர் சற்றுமுன்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பிரித்தானியாவை சேர்ந்த 27 வயதான ரக்பி வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முன்னதாக, பிரித்தானிய ரக்பி வீரர் ஒருவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (14) உயிரிழந்தார். முதல் வீரரின் உயரிழப்பிற்கான காரணம் இன்றைய தினம் வெளியானது. முகாமையாளர் மற்றும் 22 வீரர்கள் கொண்ட பிரித்தானிய ரக்பி குழாம் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்தது. கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற சிநேகப்பூர்வ ரக்பி போட்டித் தொடரில் அவர்கள் பங்கேற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இராப்போசன விருந்திலும் கலந்துகொண்டுள்ளனர். அதன் பிறகு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று சனிக்கிழமை (12) இரவு 10.30 அளவில் கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதிக்கு சென்றதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை 4 மணியளவில் ஹோட்டலுக்கு திரும்பிய வீரர்களில் இருவருக்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் குறித்த இருவரும் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பகல் 12 மணியளவில் அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதுடைய ஹாவட் தோமஸ் அன்ரு எனும் வீரரே முதலில் உயிரிழந்ததாக பொலிஸ் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.பி.சி உட்பட சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இதேவேளை, வைத்தியாலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றைய வீரரான 27 வயதுடைய பெட் தோமஸ் ரீட் இன்று மாலை உயிரிழந்தார்.