முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்து வட மாகாண முதல்வர் அறிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்து வட மாகாண முதல்வர் அறிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்து வட மாகாண முதல்வர் அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

15 May, 2018 | 7:24 pm

Colombo (News 1st) 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முரண்பாடின்றி, உணர்வுப்பூர்வமாக சகல மக்களையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பும் விருப்பமும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனால் அழைப்பு விடுத்து அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 11 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்படும் போது , இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் எங்கிருந்தாலும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வழிபாட்டுத் தலங்களில் ஆத்மசாந்தி பூஜைகளிலும் ஈடபட முடியும் என வட மாகாண முதல்வர் கூறியுள்ளார்.

18 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வர்த்தக நிலையங்களை மூடி தமது ஒற்றுமையை வௌிப்படுத்துமாறும் வர்த்தகர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் வட மாகாண முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் கைகளில் கறுப்புக்கொடிகளைக் கட்டி தமது துயரத்தை வௌிப்படுத்தலாம் எனவும் வட மாகாண முதலமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து காலை 7 மணிக்கு சைக்கிள் பேரணியை ஆரம்பித்து பிரதான சுடர் ஏற்றப்படும் இடத்தினை வந்தடைவார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய துயர் நாளை, உணர்வுப்பூர்வமாக நினைவுகூர வேண்டும் எனவும் வடக்கு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்