by Staff Writer 14-05-2018 | 6:58 PM
COLOMBO (News 1st) ஊவா மாகாண முதலமைச்சரினால் முழந்தாளிட வைக்கப்பட்டதாக தெரிவிக்கும் பாடசாலை அதிபர் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் பவானி ராகோஸ் இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
முதலமைச்சர் அவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு தம்மை அழைத்து, பாடசாலைக்கு மாணவியொருவரை அனுமதிக்காமை தொடர்பில் கடும் குற்றம் சுமத்தியதுடன் முழந்தாளிட்டு மன்னிப்பு பெறுமாறு வலியுறுத்தியதாக குறித்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018 ஜனவரி மூன்றாம் திகதி ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் பதுளை வலய கல்விப் பணிப்பாளர் முன்னிலையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் குறித்த மனுவில் கோரியுள்ளார்.
சட்டத்தரணி சுனில் வட்டகல ஊடாக தாக்கல் செய்துள்ள இந்த அடிப்படை உரிமை மனுவில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, ஊவா மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.பி.அபங்வல, பதுளை வலயக் கல்வி பணிப்பாளர் ஆர்.சீ.ரத்நாயக்க உள்ளிட்ட எட்டுபேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.