பிரித்தானிய றக்பி வீரர் கொழும்பில் உயிரிழப்பு

பிரித்தானிய றக்பி வீரர் கொழும்பில் உயிரிழப்பு

by Staff Writer 14-05-2018 | 12:44 PM
COLOMBO (News 1st) சிநேகபூர்வமாக றக்பி போட்டியில் கலந்து கொள்வதற்காக நாட்டிற்கு வருகை தந்த பிரித்தானிய வீரர் உயிரிழந்துள்ளார். க்லெம்ஸ் பைரட்ஸ் எனும் றக்பி அணியின் வீரர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 10 ஆம் திகதி சிநேகபூர்வமாக றக்பி போட்டியில் கலந்து கொள்வதற்காக 21 வீரர்களை கொண்ட றக்பி குழாம் நாட்டிற்கு வருகை தந்துள்ளது. கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள், அன்றிரவு நடைபெற்ற இராப்போசன நிகழ்விலும் கலந்து கொண்டனர். அதனையடுத்து, வீரர்கள் தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து, பின்னர், இரவு10.30 அளவில் கொள்ளுப்பிட்டியிலுள்ள களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஹோட்டலுக்கு திரும்பிய வீரர்களில் இருவர்,மூச்சுத்திணறல் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் நேற்று பிற்பகல்12 மணியளவில் உயிரிழந்துள்ளார். தோமஸ் அன்ட்ரூ எனும் 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், 27 வயதான மற்றுமொரு இளைஞர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.