மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்க தீர்மானம்

மண்ணெண்ணெய் நிவாரணம் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும்

by Staff Writer 13-05-2018 | 4:47 PM
COLOMBO (News 1st) மண்ணெண்ணெய் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கும்,பெருந்தோட்ட மக்களுக்கும் மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 47,555 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. மின்சார வசதியில்லாத சமுர்த்தி பயனாளிகளுக்கு ,சமுர்த்தி கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக மண்ணெண்ணெய் வழங்குவதற்கு சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு திறைசேரியினால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியில் 24,282 மீனவர்கள் மோட்டார் படகுகளை பயன்படுத்துகின்றனர். குறித்த மீனவர்களுக்கும் இந்த நிவாரணங்களை எதிர்வரும் முதலாம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி முதல் எரிபொருளின் விலை அதிகரிககப்பட்டதுடன், மண்ணெண்ணெயின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.