by Staff Writer 13-05-2018 | 7:47 PM
COLOMBO (News 1st) மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாத்தறை - கதிர்காமம் வீதியை மறித்து குருபொக்குன சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மண்ணெய் 57 ரூபாவாலும் டீசல் 9 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
மீனவர்களின் நலன் கருதி விரைவில் நிவாரண விலையில் எரிபொருளை பெற்றுக் கொடுக்குமாறு அகில இலங்கை பொது மீனவர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டாலும், மின்சார இணைப்புகள் அற்ற, சமுர்த்தி பயனாளிகள் மற்றும் பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண விலையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதனை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய இந்த நிவாரண உதவி 47,555 குடும்பங்களுக்கு மாத்திரமே பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
மின்சார இணைப்புகள் அற்ற சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக மண்ணெண்ணெய் நிவாரணமும் வழங்குவதற்கு சமூக வலுவூட்டல் அமைச்சிற்கு திறைசேரியூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 24,282 மீனவர்கள் இயந்திர படகுகளை பயன்படுத்துகின்றனர்.
அவர்களுக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் நிவாரண விலையில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.
இந்த நிவாரண சலுகை கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.