2,50,000பேர் அரசநிலத்தில் சட்டவிரோதமாக குடியேற்றம்

நாட்டில் சுமார் 2,50,000 பேர் அரச நிலங்களில் சட்டவிரோதமாக குடியேற்றம்

by Bella Dalima 12-05-2018 | 3:23 PM
Colombo (News 1st) நாட்டில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் (2,50,000) மேற்பட்டோர் அரசுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தெரிவித்தது. நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் குறித்த நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் பிரேமபந்து ருவன் பத்திரண தெரிவித்தார். இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, குருணாகலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான இடங்களில் மக்கள் குடியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 3000 பேருக்கு, சட்டரீதியாக காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தெரிவித்தது. இதேவேளை, சட்டவிரோதமாக அரச காணிகளில் குடியேறியுள்ள 75,000 பேருக்கு இந்த வருடத்தில் உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் பிரேமபந்து ருவன் பத்திரண கூறினார்.