இலங்கையும் ஊழலுக்கு எதிரான போராட்டமும்

ஊழல்வாதிகளுக்கு எதிராக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

by Bella Dalima 12-05-2018 | 10:11 PM
Colombo (News 1st)  ஊழல் மோசடியுடன் தொடர்புடைய அரச தலைவர்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றமையை பல்வேறு உலக நாடுகளில் தற்போது காணக்கூடியதாகவுள்ளது. அரசியல் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் நிலையில், தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமாவும் அவ்வாறானதொரு நிலையை எதிர்நோக்கியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜேக்கப் சூமாவுக்கு எதிராக தென் ஆபிரிக்க மேல் நீதிமன்றத்தில் 783 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரச சொத்துக்களையும் மக்கள் நிதியையும் மோசடி செய்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா த சில்வா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டில்மா ரூசப்புக்கு எதிராகவும் பாரிய ஊழில் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. நிறுவனமொன்றிடம் இருந்து சட்ட விரோதமாக நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து, பெரு இராச்சியத்தின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பப்லோ குசியன்ஸ்கி தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார். அரச நிதியை மோசடி செய்த குற்றத்திற்காக எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரின் இரண்டு மகன்களுக்கு தலா 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்திலும் தற்போதைய ஆட்சிக்காலத்திலும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?