ஶ்ரீதேவி மரணம்: சந்தேக மனு நிராகரிப்பு

ஶ்ரீதேவி மரணத்தில் சந்தேகம்: மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

by Bella Dalima 11-05-2018 | 5:47 PM
துபாய் நட்சத்திர விடுதியொன்றில் குளியலறைத் தொட்டியில் மூழ்கி இறந்த நடிகை ஸ்ரீதேவியின் மர்ம மரணம் தொடர்பாக சந்தேக மனுவொன்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு நிராகரித்துள்ளது. 5.1 அடி நீளமுள்ள குளியலறைத் தொட்டியில் 5.7 அடி உயரமுள்ள நபரொருவர் துரதிர்ஷ்டவசமாக வீழ்ந்து மூழ்கி இறப்பதை எங்கனம் சந்தேகத்திற்கிடமின்றி ஒப்புக்கொள்ள முடியும் என இந்த மனுவில் மூத்த ஆலோசகரான விகாஷ் சிங் கேள்வி எழுப்பிய போதும், நீதிபதிகள் குழு மனுவை நிராகரித்துள்ளது. மூத்த சட்ட ஆலோசகரான விகாஷ் சிங் தனது மனுவில், நடிகை ஸ்ரீ தேவி மரணம் தொடர்பான ஆவணங்கள் அனைத்துமே துபாய் அரசால் இந்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டவையே, அவை சந்தேகத்தை தீர்ப்பதற்கு பதில் மேலும் சந்தேகத்தைத் தூண்டுவனவாகவே இருப்பதால், ஸ்ரீதேவி மரண வழக்கில் சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு தனி முகவரகம் மூலம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, துபாயில் கடந்த பெப்ரவரி மாதம் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் எடுக்கப்பட்டிருந்த இன்சூரன்ஸ் காப்புத்தொகை குறித்தும் தனது மனுவில் கோடிட்டுக் காட்டியிருந்தார். இந்த வழக்கில் மனுதாரரான சுனில் சிங் முதலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த சந்தேக மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றமும் மனு மீதான விசாரணையை நிராகரித்துள்ளது.