போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை

பஸ், முச்சக்கரவண்டி, ரயில் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை

by Bella Dalima 11-05-2018 | 4:24 PM
Colombo (News 1st)  எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பிற்கு இணையாக பஸ், முச்சக்கரவண்டி மற்றும் ரயில் கட்டணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் இன்று முற்பகல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கட்டண அதிகரிப்பு குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கட்டண அதிகரிப்பு தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. எரிபொருள் விலை அதிகரிப்பினால், நாளாந்தம் குறுந்தூர பஸ் சேவைகளுக்கு 1200 ரூபாவும், தூர சேவை பஸ்களுக்கு சுமார் 2,200 ரூபா நட்டமும் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதனால் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைவாக, நூற்றுக்கு 15 வீத கட்டணம் அதிகரிக்கப்படல் வேண்டும் என சம்மேளனத்தின் தலைவர் அர்ஜூன பிரியன்ஜித் தெரிவித்தார். தமது யோசனைத் திட்டம் குறித்து அரசாங்கத்திடம் தெரிவிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர் கே.டி. அல்விஸ் தெரிவித்தார். ஆரம்பக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆரம்ப கட்டணமான 50 ரூபா கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கே.டி. அல்விஸ் குறிப்பிட்டார். அடுத்த வாரம் முதல் கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறினார். இதேவேளை, ஏற்கனவே 15 ரூபாவால் அதிகரிக்கத் திட்டமிட்டிருந்த ரயில் கட்டணங்களை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியமுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. கட்டண அதிகரிப்பு தொடர்பிலான தீர்மானத்தை மீண்டும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறினார். நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. அதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. லங்கா ஒட்டோ டீசலின் விலை 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசலின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.