வவுனியாவில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் அராஜகத்தைக் கண்டித்து சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

by Bella Dalima 10-05-2018 | 8:43 PM
Colombo (News 1st)  வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு சிறைக்காவலர்களால் ஏற்படுத்தப்படும் அநீதிகளைக் கண்டித்து சட்டத்தரணிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக இடம்பெற்றிருந்தது. வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல், சித்திரவதை, அராஜகம் போன்றவற்றை எதிர்த்து தாமாக குரல் கொடுக்க முடியாத நிலையில் உள்ள விளக்கமறியல் கைதிகளின் சார்பில், சட்டத்தரணிகளாகிய தாம் அவர்களின் நிலையை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கில் இந்த போராட்டத்தை முன்னெடுத்ததாக வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலம் தெரிவித்தார். வவுனியா சிறைச்சாலையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் உடனடியாக மாற்றப்பட்டு, புதிய உத்தியோகத்தர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான குழுவை அமைத்து, விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் சாட்சியத்தைப் பதிந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.