வட கொரியாவிற்கு நன்றி தெரிவித்த அமெரிக்கா

வட கொரியாவிற்கு நன்றி தெரிவித்த அமெரிக்கா

by Staff Writer 10-05-2018 | 12:01 PM
தமது நாட்டு பிரஜைகளை விடுவித்தமை தொடர்பில் வடகொரியாவுக்கு நன்றி தெரிவித்து வௌ்ளை மாளிகை அறிக்கை வௌியிட்டுள்ளது. குறித்த கைதிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் வடகொரியாவின் போக்கை பாராட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளதாக வௌ்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கைதிகள் மூவரை அந்நாட்டு அரசு நேற்று விடுவித்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோருக்கு இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விமானப் படைத் தளத்தை வந்தடைகின்றபோது, தாம் நேரில் சென்று வரவேற்கவுள்ளதாக டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த கைதிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டமை மனித உரிமை மீறல் என கடந்த காலங்களில் கடும் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. இந்த மூவரில் 81 வயதான தந்தை மற்றும் அவரின் 40 வயதான மகன் ஆகியோரும் அடங்குகின்றனர். இவர்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் தாம் மிகுந்த வருத்தமடைந்திருந்ததாகவும், தற்போது மகிழ்ச்சியடைவதாகவும் அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தம்மை விடுவித்தமை தொடர்பில் தமது நாட்டிற்கும் வடகொரியாவிற்கும் நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாக விடுவிக்கப்பட்ட கைதிகள் தெரிவித்துள்ளனர். அணுவாயுத உற்பத்தி தொடர்பில் வடகொரியாவின் போக்கை அமெரிக்கா கண்டித்த நிலை மாறி, தற்போது இருநாட்டு அரச தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்க கைதிகளை வடகொரியா விடுவித்துள்ள இந்த செயற்பாட்டின் மூலம், அமெரிக்க- வடகொரியாவுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.