முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் முரண்பாடு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிப்பதில் முரண்பாடு

by Bella Dalima 09-05-2018 | 10:14 PM
Colombo (News 1st) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் வட மாகாண முதலமைச்சர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவது தொடர்பாக இரண்டாவது தடவையாகவும் வட மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சி, ஊடகவியலாளர்கள் ஆகியோர் கூடி இன்று ஆராய்ந்தனர். இந்த சந்திப்பு வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. இன்றைய கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் கூட்டத்திற்கு தாம் சமூகமளிக்கவில்லை என ஒன்றியத் தலைவர் கி. கிருஷ்ண மேனன் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் மே 19 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. எனினும், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் கடந்த மூன்று வருடங்களாக அரசியல் கட்சிகள் வெவ்வேறாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தினர். இந்த நிலையில், வட மாகாண நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிப்பது தொடர்பில் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தலைமையில் வட மாகாண சபை உறுப்பினர்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுடனான சந்திப்பு கடந்த 7 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வட மாகாணசபையின் தீர்மானத்தினை அடுத்து அன்றைய தினமே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒரே நிகழ்வாக நடத்த தாம் மேற்கொண்ட முயற்சி பயனற்றுப்போயுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட மாகாண சபை தாமே நிகழ்வை நடத்தப்போவதாக அறிவித்துள்ளமை மன வேதனையளிப்பதாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒரே நிகழ்வாக நடத்த யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் கடந்த பல வாரங்களாக பல்வேறு முயற்சிகளை ​மேற்கொண்டதாகவும் அதற்கு பல்வேறு அரசியல் செயற்பாட்டு குழுக்களும் அமைப்புக்களும் ஆதரவு வழங்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை ஒற்றுமையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தன.