மாணவர் ஒன்றியப் பேரணியை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணியை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

by Bella Dalima 09-05-2018 | 9:11 PM
Colombo (News 1st)  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குழு என்பன கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். SAITM மருத்துவக்கல்லூரி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி களனி பல்கலைக்கழத்திற்கு அருகிலிருந்து இந்த பேரணி ஆரம்பமானது. கொழும்பு - கண்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்னர் பேரணியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு வரை சென்றனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவிற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தியதுடன் கலகத்தடுப்பு பொலிஸாரும் அழைக்கப்பட்டிருந்தனர். தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காமையால் ஆணைக்குழுவிற்குள் பிரவேசிக்க மாணவர்கள் முயற்சி செய்தனர். இதன்போது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். மாணவர்கள் கலகங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு, வீதியை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவித்தமையால் அவர்களைக் கலைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு இன்று மாலை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.