கனிஷ்ட மெய்வல்லுநர்: முகாமையாளர் நியமனத்தில் முரண்

கனிஷ்ட மெய்வல்லுநர் அணியின் முகாமையாளர் நியமனத்தில் முரண்பாடு

by Bella Dalima 09-05-2018 | 10:01 PM
Colombo (News 1st)  தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 4X100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற குழாத்திற்கு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படாதுள்ளது. இதேவேளை, கனிஷ்ட மெய்வல்லுநர் அணியின் முகாமையாளர் பொறுப்புக்கு மீண்டும் அனில் வீரசிங்க நியமிக்கப்பட்டமை முரண்பாடான நிலையைத் தோற்றுவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 12 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. எனினும், கடந்த வாரம் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் புதிய சாதனையுடன் 4X100 மீற்றர் அஞ்சலோட்டத்தை வெற்றிகொண்ட இலங்கை குழாம் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்கு உள்வாங்கப்படவில்லை. சுசந்திகா ஜயசிங்க, தமயந்தி தர்ஷா ஆகியோர் இணைந்து 1994 ஆம் ஆண்டு 4X100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் நிலைநாட்டிய சாதனையை இந்த வீராங்கனைகள் முறியடித்துள்ளனர். இந்த முறை ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கமொன்றை வெற்றிகொள்ளும் வாய்ப்பிருந்தும் அந்த மகளிர் குழாத்திற்கு வாய்ப்பளிக்காமல் இருக்கும் அதிகாரிகளின் செயற்பாடு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆசிய சாம்பியன்ஷிப்பில் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் அமாஷா டி சில்வா இடம்பெறுகின்றார். அதன் பிரகாரம், அஞ்சலோட்டக் குழாத்தில் மூன்று வீராங்கனைகளையேனும் இதற்கு பெயரிட்டால் மகளிருக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை திறமையை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதேவேளை, மீண்டும் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர் அணியின் முகாமையாளராக அனில் வீரசிங்க பெயரிடப்பட்டமை வியப்புக்குரிய காரணமாக அமைந்துள்ளது. அவரது செயற்பாடுகள் மற்றும் கடந்த கால தகவல்கள் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக விசாரணைகள் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முகாமையாளர் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அந்த விசாரணைகளின் பரிந்துரைகளை இந்த வாரம் இலங்கை மெய்வல்லுநர் சங்கத்திடம் வழங்கவுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரான ஜயந்த விஜேரத்ன ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.