இருட்டு அறையில் முரட்டு குத்திற்கு எதிராக புகார்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு எதிராக திருநங்கைகள் முறைப்பாடு

by Bella Dalima 09-05-2018 | 5:03 PM
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கைகள் முறைப்பாடு முன்வைத்துள்ளனர். 'ஹரஹர மஹா தேவகி' படத்தை இயக்கி சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் எழுதி இயக்கிய படம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். பெண்களை மோசமாக சித்தரித்தும், இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் உள்ளடங்கியும் இருப்பதால் இப்படம் கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது. படத்தைத் தயாரித்தவர், இயக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு முறைப்பாடு செய்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு திரைத்துறையினரே எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர். பாமக தலைவர் ராமதாஸும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த படம் குறித்து மேலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. திருநங்கைகளை வெறும் பாலியல் தொழில் செய்பவர்களாக கேவலமாகக் கொச்சைப்படுத்தி காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அத்தகைய காட்சிகளை நீக்கி, இயக்குனர் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி திருநங்கைகள் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர். இயக்குனர் பொது மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.