அமைச்சரவை உபகுழு யோசனைகள் அமைச்சரவையில் முன்வைப்பு

அமைச்சரவை உப குழுவின் யோசனைகள் இன்று அமைச்சரவையில் முன்வைப்பு

by Staff Writer 09-05-2018 | 6:59 AM
COLOMBO (News 1st) ரயில்வே தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட அமைச்சரவை உப குழுவின் யோசனைகள் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையின் உப குழுவின் தலைவர் கலாநிதி சரத் அமுனுகமவுடன் நேற்று மாலை கலந்துரையாடியதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார். ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ,ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ரயில் சாரதிகளை பிரநிதித்துவப்படுத்தும் பிரதான நான்கு தொழிற்சங்கங்களும் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்க தயாராகிய போதிலும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டதையடுத்து இன்று நண்பகல் 12 மணி வரை அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. தமது கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு வழங்கப்படவில்லையெனில் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக பெர்னான்டோ நியூஸ் பெஸ்டுக்கு தெரிவித்தார்.