இலங்கைக்கு கடத்தப்படும் தங்கத்தின் அளவு இரட்டிப்பாக அதிகரிப்பு

இலங்கைக்கு கடத்தப்படும் தங்கத்தின் அளவு இரட்டிப்பாக அதிகரிப்பு

இலங்கைக்கு கடத்தப்படும் தங்கத்தின் அளவு இரட்டிப்பாக அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 May, 2018 | 8:36 pm

Colombo (News 1st) 

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்கத்தின் அளவு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

கடல் மற்றும் வான் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக இலங்கை சுங்கம் சுட்டிக்காட்டியது.

இலங்கை சமூகத்தில் தங்க நகைகளுக்கு எப்போதும் சிறப்பிடமுண்டு.

சுப மங்கள கருமங்களின் போது எம்மை அலங்கரிக்கும் தங்க நகைகள், சில அவசர சந்தர்ப்பங்களில் கடனுதவிகளைப் பெறவும் பயன்படுகின்றன.

இதனால் தங்க நகைகளை சேமிக்கும் பழக்கம் இலங்கையர்கள் மத்தியில் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது.

இலங்கையின் தங்க உற்பத்திகளுக்கு சர்வதேச நற்பெயர் இருக்கின்ற போதிலும், அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற தங்கக் கடத்தல்கள் அந்த நற்பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மீனவர்கள் என்ற போர்வையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக தங்கம் கடத்தப்படுகின்றது.

வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 18 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் தரவுகள் கூறுகின்றன.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது தங்கம் கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.

கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

நாட்டின் தேவைக்கு அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவித்து அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சு கடந்த மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத வரியை விதித்தது.

சட்டவிரோதமாக நாட்டிற்கும், நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கும் தங்கத்தை கடத்தும் பல முயற்சிகள் அண்மைக்காலத்தில் முறியடிக்கப்பட்டன.

26 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்