லெபனான் தேர்தலில் ஹிஸ்புல்லா கட்சி முன்னிலை

லெபனான் பொதுத்தேர்தலில் ஹிஸ்புல்லா கட்சி முன்னிலை

by Bella Dalima 08-05-2018 | 3:53 PM
லெபனானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஹிஸ்புல்லா கட்சி முன்னிலையில் உள்ளது. லெபனானில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடைசியாக பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் 10 ஆண்டுகளாக, நெருங்கிய அண்டை நாடான சிரியாவில் ஸ்திரமான அரசு அமையாததால் லெபனானில் பொதுத்தேர்தல் நடத்தப்படவில்லை. இரண்டு முறை பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலம் மட்டும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் 128 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மிகவும் குறைந்த அளவாக 49.2 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. பதிவான வாக்குகளை எண்ணும் பணி திங்கட்கிழமை தொடங்கியது. அதில், லெபனானில் உள்ள முக்கிய அரசியல் மற்றும் ஆயுத இயக்கமான ஹிஸ்புல்லா முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாக்கள் அங்கு ஆட்சியமைக்கக்கூடும் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.