பட்டதாரிகளைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம்; மின்சாரம், ரயில்வே, கல்விசாரா ஊழியர்களும் எதிர்ப்பு நடவடிக்கை
by Bella Dalima 08-05-2018 | 9:18 PM
Colombo (News 1st)
தொழில்வாய்ப்புக் கோரி கொழும்பிற்கு வருகை தந்த பட்டதாரிகளைக் கலைப்பதற்கு பொலிஸார் இன்று நடவடிக்கை எடுத்தனர்.
இதேவேளை, கலந்துரையாடலின் ஊடாக தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்து மின் பொறியியலாளர் இன்று முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்து ரயில்வே தொழிற்சங்கங்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தயாராகி வருகின்றன.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதனால் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக பலகலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
அரச தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு கோரி ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கொழும்பு கோட்டை சந்தியில் எதிர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
லோட்டஸ் சுற்றுவட்டத்தில் பேரணியைத் தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், அந்த சந்தர்பத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
லோட்டஸ் சுற்றுவட்டத்தைக் கடந்து செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்த போது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் 5 உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
கலந்துரையாடல் தீர்வின்றி நிறைவு பெற்றமையினால் லோட்டஸ் வீதியில் இருந்து வௌியேறி ஜயவர்த்தனபுர கோட்டே ஊடாக பாராளுமன்ற வளாகத்திற்கு செல்லும் நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.
வருடாந்தம் 8 ,000 தொடக்கம் 10,000 பட்டதாரிகள் வேலையற்றவர்கள் பட்டியலில் இணைகின்றனர்.
2012 ஆம் ஆண்டு முதல் சுமார் 6 வருட காலப்பகுதியில் 57,000 பட்டதாரிகள் நாட்டில் வேலையற்றவர்களாக உள்ளனர்.
எவ்வாறாயினும், 20,000 பட்டதாரிகளை சமுர்த்தி அதிகாரிகளாக இணைப்பதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் கோரப்பட்டிருந்தது.
எனினும், அந்த செயற்பாடுகள் தொடர்பில் தற்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பட்டதாரிகள் தொழில் கோரி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பல்கலைக்கழ கல்வி சாரா ஊழியர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து பல நாள் போராடி முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அதிகாரிகள் பொருட்படுத்தாது உள்ளதாகக் கூறினர்
வாக்குறுதி வழங்கப்பட்ட 10 வீத மாதாந்த மேலதிகக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கைகயாக இருந்தது.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருவதற்கு நாளை நண்பகல் 12 மணி வரை நான்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளன.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ரயில் சாரதிகளை பிரநிதித்துவப்படுத்தும் பிரதான நான்கு தொழிற்சங்கங்களும் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கத் தயாராகிய போதிலும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டதையடுத்து, நண்பகல் 12 மணி வரை அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீண்ட கால மின் பிறப்பாக்கத் திட்டம் தொடர்பான தமது கோரிக்கைகளுக்கு சிறந்த பதில் வழங்கப்படாமையினால் மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் சட்டப்படி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உரிய நேரத்தில் மாத்திரம் சேவையாற்றுதல், உரிய பாதுகாப்பு நடவடிக்கையின்றி சேவையாற்றுவதில் இருந்து விலகுதல், திடீர் அழைப்புகளுக்கு ஏற்ப சேவைக்கு வருகை தராமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இதனுள் உள்ளடங்குகின்றன.
இந்த விடயம் தொடர்பில் நாளைய தினம் (09) அமைச்சரவையில் கலந்துரையாடப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித்.பி. பெரேரா தெரிவித்தார்.