ஜனாதிபதியின் சிம்மாசன உரை

ஜனாதிபதியின் சிம்மாசன உரை: அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் தெளிவூட்டல்

by Bella Dalima 08-05-2018 | 7:05 PM
Colombo (News 1st)  எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன உரையைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய சிம்மாசன உரையின் போது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் தெளிவுபடுத்தினார். இலங்கை சமூகத்தை மீண்டும் ஜனநாயக மயப்படுத்தி மனிதநேயமும் பொறுப்பும் மிக்க ஒரு சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற விடயம் கடந்த மூன்று வருடங்களுள் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். 2015 இல் தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனநாயக ரீதியிலான அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பினை நன்றியுணர்வுடன் ஞாபகப்படுத்துவதாக அவர் கூறினார். 2015 ஜனவரி 08 ஆம் திகதி தமது தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில், புகையிலை மற்றும் போதைப்பொருள் ஆகியவற்றை ஒழிப்பதற்கு தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபையினை நிறுவுவதற்கான சட்டத்திருத்தம், தேசிய ஒளடத சட்டம் மற்றும் 19 ஆவது சீர்திருத்தம் உள்ளிட்ட மக்கள் நேய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் எவ்வித தடங்கல்களும் இன்றி தேசிய இணக்கப்பாட்டிற்காக ஒன்று கூடியதாகவும் பாராளுமன்றத்தில் காணப்படுகின்ற பகைமை அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு தேசியத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு ஒன்றுபட்டு செயற்பட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். 2015 மே மாதம் 15 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு அமைய, சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்தாது, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையில் குறைக்கக்கூடிய ஆகக்கூடிய அதிகாரங்களை குறைக்க, அகற்ற முடிந்தமை இணக்கப்பாட்டு அரசியலின் உண்மையான பலமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். சர்வஜன வாக்குரிமையை யதார்த்தமாக்கும் வகையில், 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உள்ளூராட்சித் தேர்தலுக்கான திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றியிருப்பதாவும், 2010 ஆம் ஆண்டு முதல் நாடு இழந்திருந்த GSP வரிச்சலுகையினை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் ஜனாதிபதி கூறினார். 2014 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பாரதூரமான குற்றச்செயல்களை 30 சதவீதத்தால் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளதாகவும், துறைமுகத்துறையில் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரீதியிலான பல வெற்றிகளை ஈட்ட முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் தெரிவித்தார். மின்சக்தித் துறையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியில் சூரிய சக்தி செயற்திட்டம் மூலம் 150 மெகாவாட்ஸ் மின்சக்தியை புதிதாக தேசிய மின்சக்தி கட்டமைப்புக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாகவும் லக் சதொச விற்பனை மையங்கள் 300 இலிருந்து 400 வரை உயர்த்தப்பட்டிருப்பதுடன், அவற்றினூடாகக் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி தமது உரையில் தெரிவித்தார். மேலும், 1. மக்களின் பொருளாதார சுபீட்சத்தை உறுதிப்படுத்தல் 2. வறுமையை இல்லாதொழித்தல் 3. இளைஞர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தல் 4. அரச சேவையாளர்களுக்கு திருப்திகரமான சூழலை ஏற்படுத்தல் 5. பொலிஸ் மற்றும் முப்படையினரின் தன்னம்பிக்கையையும் உயர் குறிக்கோள்களையும் உறுதிப்படுத்தல் 6. சட்டம், அதிகாரம், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தினை சமூகத்தில் உறுதி செய்தல் 7. தமிழ் மக்களின் சம உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளல் 8. முஸ்லிம் மக்களின் நலன் மற்றும் சமூக, கலாசார தேவைகளை உறுதி செய்தல் 9. மலையக தமிழ் மக்களின் பொருளாதார, சமூக நிலையை மேம்படுத்தல் 10. நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் கலாசார உரிமைகளை பலப்படுத்தி, உறுதி செய்து தேசத்தின் அடையாளத்தினை வலுப்படுத்தல் 11. பெண்களை பலப்படுத்துதலும் அவர்களது நேரடி பங்களிப்பும் 12. சமூகத்திலுள்ள விசேட தேவைகளை உடைய பிரஜைகள் தொடர்பாக உணர்வுப்பூர்வமாக செயற்படல் 13. நாட்டின் இயற்கைச் சூழலை பாதுகாத்து, தேசிய வளங்களை எதிர்கால சந்ததியினருக்கும் பெற்றுத்தரக்கூடிய பேண்தகு அபிவிருத்தியை உறுதி செய்தல் 14. சமய நம்பிக்கைகள் எமது மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில், சகல சமய பெரியார்களையும் மத குருமார்களையும் மகா சங்கத்தினரையும் பேண்தகு முறையில் போஷித்தல் 15. அரசியல் பலப்பரீட்சைக்கு அப்பால் சென்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக சகல இன, மத, அரசியல், கட்சிகளை ஒன்றிணைத்து கட்டியெழுப்பப்படும் தேசிய பேண்தகு அபிவிருத்தி இலக்கினை உருவாக்குதல் ஆகியன மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும், உண்மையான மக்கள் நேய செயற்திட்டங்களின் நிபந்தனைகளாக இனங்காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சிம்மாசன உரையின் போது தெரிவித்தார்.