ஆசிரியர்களை தருவிக்கும் திட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவரும் திட்டம் கைவிடப்பட்டது: வி. இராதாகிருஷ்ணன்

by Bella Dalima 08-05-2018 | 8:18 PM
Colombo (News 1st)  மலையக உயர் தர மாணவர்களுக்கு விஞ்ஞான, கணிதப் பாடங்களைக் கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவரும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக அதனை கைவிட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார். கல்விப் பொதுத்தராத சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண மாணவர்கள் தமது பிரதேச பாடசாலைகளில் விஞ்ஞான, கணிதப் பிரிவை தொடர முடியாமையினால் வர்த்தக, கலைப் பிரிவுகளை தெரிவு செய்வது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் பல தடவைகள் செய்தி வௌியிட்டிருந்தது. அரசியல்வாதிகள் காலத்திற்குக்காலம் வாக்குறுதிகளை வழங்கினாலும் தமிழ் பாடசாலைகளில் விஞ்ஞான, கணிதப் பிரிவை ஆரம்பிக்க காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென மாணவர்கள், பெற்றோர் மற்றும் தொழிற்சங்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஒரு சில பாடசாலைகளில் விஞ்ஞான, கணிதப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு போதுமான, தகுதியான ஆசிரியர்கள் இல்லையென அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனிடம் வினவியபோது, பிரச்சினை நிலவிய பகுதியில் தற்போது விஞ்ஞான, கணிதப் பிரிவுகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பண்டாரவளை தமிழ் மகாவித்தியாலயம், பதுளை சரஸ்வதி வித்தியாலயம், பலாங்கொடை கனநாயகம் வித்தியாலயம், கஹவத்தை சென்ஜோன்ஸ் வித்தியாலயம் என்பவற்றில் கணித, விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு கல்வி செயற்பாடுகள் இடம்பெறுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். விஞ்ஞான, கணிதப் பிரிவுகளை ஆரம்பித்தாலும் அங்கு கல்வி செயற்பாடுகள் உரிய முறை இடம்பெறுகின்றனவா? இராஜாங்க அமைச்சர் கூறிய பாடசாலைகளில் உயர் தரத்தைத் தொடரும் மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது, ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.