ஒலிம்பிக் பயிற்சியாளர் மீது பாலியல் முறைப்பாடு

அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் மீது 4 வீராங்கனைகள் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடு

by Bella Dalima 08-05-2018 | 4:48 PM
அமெரிக்க ஒலிம்பிக் போட்டி மற்றும் டேக்வான்டோ அமைப்பு பயிற்சியாளர் மீது விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். கெய்டி கில்பர்ட், மேன்டி மெலூன், ஆம்பர் மீன்ஸ் மற்றும் கேபி ஜோஸ்வின் ஆகிய 4 வீராங்கனைகள் கொலராடோ ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதில் அமெரிக்க ஒலிம்பிக் டேக்வான்டோ பயிற்சியாளர் ஜீன் லோபஸ், அவரது தம்பி ஸ்டீவன் ஆகியோர் தங்களிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டீவன் 2 தடவைகள் ஒலிம்பிக் சாம்பியன் ஆனவர். வழக்குத் தொடர்ந்த வீராங்கனைகளில் ஒருவரான மெலோன் 2 தடவை உலக சாம்பியன் ஆனவர். எகிப்தில் 1997 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது பயிற்சியாளர் ஜீன் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். அப்போது அவருக்கு வயது 15. மற்றொரு வீராங்கனையான கில்பர்ட் கூறிய புகாரில், 2002 ஆம் ஆண்டு ஈகுவடரிலும், 2003 ஆம் ஆன்டு ஜெர்மனியிலும் பயிற்சியாளர் ஜீன் தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார். அவர்களுக்கு இணங்காத வீராங்கனைகள் அணியில் இருந்து வௌியேற்றப்படுவார்கள் அல்லது இடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் முறைப்பாட்டில் குறித்த பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால், டேக்வான்டோ பயிற்சியாளர் ஜீன் லோபஸிற்கு அமெரிக்க ஒலிம்பிக் சங்கம் வாழ்நாள் தடை விதித்துள்ளது. விசாரணை நடைபெறுவதால் அவரது தம்பிக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.