எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு நாளை

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு நாளை

by Staff Writer 07-05-2018 | 8:23 PM
COLOMBO (News 1st) எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி தலைமையில் நாளை (08) பிற்பகல் 2.15 இற்கு ஆரம்பமாகவுள்ளது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பாராளுமன்ற அமர்வு நிறைவு செய்யப்பட்டது. அதன்பிரகாரம் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு சம்பிரதாயபூர்வமாக நடைபெறும் வைபவத்தின் பின்னர் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த வைபவத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் பிற்பகல் 1.40 இற்கு பாராளுமன்றத்திற்கு வருகைத் தரவுள்ளனர். அதனை தொடர்ந்து ஜனாதிபதி கொடி ஏற்றப்பட்டு, மரியாதை அளிக்கப்படும். பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய பிற்பகல் 2.10 அளவில் பாராளுமன்ற கோரத்திற்கான மணி ஓசை எழுப்பப்பட்ட பின்னர், அனைத்து உறுப்பினர்களும் வருகை தந்து இருக்கையில் அமர்வார்கள். சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற பொதுச்செயலாளருடன் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த பின்னர், சபாநாயகரின் இருக்ககையில் ஜனாதிபதி அமர்வார். அதனைத் தொடர்ந்து சபை அமர்வை ஆரம்பித்து, ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவார். ஜனாதிபதியின் உரையின் பின்னர் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதுடன், சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இருந்து வௌியேறும் போது, மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படும். ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய விடயங்களமீதான விவாதம் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. https://www.youtube.com/watch?v=vxSDNoSdlNE

ஏனைய செய்திகள்