நாடளாவிய ரீதியில் தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள்

நாடளாவிய ரீதியில் தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள்

நாடளாவிய ரீதியில் தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள்

எழுத்தாளர் Staff Writer

07 May, 2018 | 8:01 pm

COLOMBO (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக்கூட்டம் ”தேசிய ஒற்றுமை தொழிலாளர் சக்தி” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு செங்கலடி மாவடிவேம்பில் இன்று மாலை நடைபெற்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்க பிரதிநிதிகள் பேரணியாக மேதினக்கூட்டம் நடைபெற்ற மாவடிவேம்பிற்கு சென்றனர்.

சர்வமத வழிபாடுகளின் பின்னர் மேதினக் கூட்டம் ஆரம்பமானது.

அதன்பின்னர் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மே தினக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

அண்மையில் அரசாங்கத்தில் விலகிய தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால , டிலான் பெரேரா ஆகியோரும் மேதினக் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

மேதினக்கூட்டத்தில் கலந்துகொள்ளாது அவர்கள் அங்கிருந்து வௌியேறினர்.

தொழிலாளர்களுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய சேவையை கௌரவிக்கும் வகையில் இதன்போது விருதொன்றும் வழங்கப்பட்டது.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டம் நுவரெலியா நகரில் இன்று நடைபெற்றது.

சினிசிட்டா மைதான சந்தியில் ஆரம்பமான பேரணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
————————————————————————————————————————————-

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக்கூட்டம் தலவாக்கலையில் இன்று நடைபெற்றது.

தலவாக்கலை நகர சுற்றுவட்டத்திற்கு அருகில் கூடிய மக்கள் பேரணியாக தலாவாக்காலை நகர சபை மைதானத்தை சென்றடைந்தனர்.

————————————————————————————————————————————–

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

————————————————————————————————————————————–

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் மேதினக்கூட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், காலி சமனல மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

வரிச்சுமை, காட்டிக்கொடுப்பு, முறிகள் கொள்ளை, அடக்குமுறை, தேசிய வளங்களை விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாளர்களின் ஒன்றிணைந்த மேதினக்கூட்டம் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

மேதினப் பேரணியை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது.

—————————————————————————————————————————————

மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம், கொழும்பு பி.ஆர்.சி. மைதானத்தில் நடைபெற்றது.

‘சமூக நீதி, தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் மக்களாட்சி’ என்ற தொனிப்பொருளிலான மக்கள் விடுதலை முன்னணியின் மேதின பேரணி பொரளை கெம்பல் மைதானத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமானது.

கட்சியின் தலைவர்கள், வௌிநாட்டு பிரதிநிகள், கலைஞர்கள், தொழிற்சங்க தலைவர்கள், கனிஷ்ட அமைப்புக்களின் உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

சர்வதேச தொழிலாளர் தின வடிவமைப்புக்கள் இம்முறையும் பேரணியை அலங்கரித்தன.

கொழும்பு பி.ஆர்.சி. மைதானத்தை பேரணி வந்தடைந்ததை அடுத்து, மாலை 4 மணிக்கு மேதினக்கூட்டம் ஆரம்பமானது.

தற்போதைய அரசியல் நிலைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் சில யோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.

————————————————————————————————————————————-

நாட்டின் பல பகுதிகளிலும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பேரணிகள், கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மே தினக்கூட்டம் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை – கறுவாக்கேணி சந்தியிலிருந்து குழந்தை யேசு மைதானம் வரை வாகனத்தொடரணியும் முன்னெடுக்கப்பட்டது.

அருணலு கட்சியின் தலைவர் போர்டைஸ் பகுதியில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

————————————————————————————————————————————
நவதோய மக்கள் முன்னணியின் மே தினக்கூட்டம் கொழும்பு – ஜிந்துப்பிட்டி மைதானத்தில் நடைபெற்றது.

மோதரையில் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
————————————————————————————————————————————–

திருகோணமலை கிண்ணியா முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் சங்கத்தின் பேரணி இன்று நடைபெற்றது.

தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
—————————————————————————————————————————————
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் மற்றும் அக்கரைப்பற்று மகா ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் மேதினப் பேரணியும் இன்று முற்பகல் நடைபெற்றது.

—————————————————————————————————————————————
மலையக மக்களின் வீட்டுரி இயக்கத்தின் பேரணி மாத்தளையில் இன்று நடைபெற்றது.

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் ஆரம்பமான பேரணி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நிறைவுபெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்