அரசியற் கட்சிகளின் மே தினக்கூட்டங்கள்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பேரணிகள், கூட்டங்கள்

by Staff Writer 07-05-2018 | 2:39 PM
COLOMBO (News 1st) பிரதான அரசியற் கட்சிகளின் மே தினக்கூட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. சர்வதேச தொழிலாளர் தினம் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்ற போதிலும், வெசாக் வாரத்தை முன்னிட்டு மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களை இன்று நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. நாட்டின் பல பகுதிகளிலும் மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன். இடம்பெற்றும் வருகின்றன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக்கூட்டம் மட்டக்களப்பு செங்கலடியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. ''தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளர் பலம்’ என்ற தொனிப்பொருளில் , அனைத்து மாகாணங்களில் இருந்தும் வருகை தரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மே தின கூட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது மே தின கூட்டத்தை காலியில் ஏற்பாடு செய்துள்ளது. இன்று பிற்பகல் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் கொழும்பு பீ. ஆர்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் அம்பாறை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த மே தின பேரணி மற்றும் கூட்டம் இன்று அம்பாறையில் இடம்பெற்றது. அத்துடன் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் மேதினக் கூட்டம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.