மக்கள் விடுதலை முன்னணியின் தௌிவுப்படுத்தல்

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணை: மக்கள் விடுதலை முன்னணியின் தௌிவுப்படுத்தல்

by Staff Writer 06-05-2018 | 7:59 PM
COLOMBO (News 1st) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இன்று தெளிவுப்படுத்தியது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் 20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனை, தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரேரணையின் உள்ளடக்கத்தை, மக்கள் விடுதலை முன்னணி பிரசார செயலாளர் விஜித ஹேரத் இன்று முதன் முறையாக வௌியிட்டார். மக்களால் தெரிவுசெய்யப்படும் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குப் பதிலாக, பாராளுமன்றமே ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் என்பது இதிலுள்ள முக்கிய விடயமாகும். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னரே அது நடைமுறைக்கு வரும் என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடாகும். தற்போதைய பாராளுமன்றம் அதன்போது கலைக்கப்படுவதுடன், புதிய பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி அரச தலைவரே தவிர அவர் அரசாங்கத்தின் தலைவராக செயற்பட மாட்டார் என திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் ஜனாதிபதி அமைச்சுப் பொறுப்பை வகிக்க முடியாது என்பதுடன், அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கெடுக்கவோ அமைச்சரவைக்கு தலைமை தாங்வோ மாட்டார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமைச்சரவையின் தீர்மானங்களை அறிந்து கொள்வதற்கும் பிரேரணைகளை முன்வைப்பதற்கும் உரித்துடையவராவார் என்ற யோசனையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் எவையும் மாற்றமடையாது என்பதுடன், ஆளுனர்களை நியமித்தல், நீக்குதல், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் அவ்வாறே நீடிக்கும். தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நியமிக்கும் அதிகாரம் மற்றும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குதல் என்பன அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி பிரேரித்துள்ளது. ஜனாதிபதியின் தீர்மானத்திற்கேற்ப பாராளுமன்ற அமர்வை ஒத்திவைக்கும் அதிகாரம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் உத்தேச திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=SONknQ8LW-8  

ஏனைய செய்திகள்