வௌ்ளத்திற்கு முன் ஆயத்தமாவோம்: காலியில் தௌிவூட்டல்

வௌ்ளத்திற்கு முன் ஆயத்தமாவோம்: காலி மாவட்டத்தின் 3 இடங்களில் தௌிவூட்டல் திட்டம்

by Staff Writer 06-05-2018 | 7:24 PM
COLOMBO (News 1st) வருடாந்தம் ஏற்படும் வௌ்ளப்பெருக்கினால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடுகிறது. உயிரிழப்புக்கள், சொத்து சேதங்கள் போன்றவற்றை குறைப்பது தொடர்பில் மக்களை தௌிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். இதற்காக, வௌ்ளத்திற்கு முன் ஆயத்தமாவோம் எனும் தொனிப் பொருளில் விசேட தௌிவுபடுத்தல் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் சக்தி திட்டத்துடன் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு இயக்கம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவு ஆகியன ஒன்றிணைந்து இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதன் இரண்டாம் கட்டம், காலி மாவட்டத்தின் மூன்று இடங்களில் இன்று இடம்பெற்றது. நெளுவ ஶ்ரீ தர்மபால விகாரையில் முதலாவது தௌிவுபடுத்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வருடாந்தம் வௌ்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். அவசர நிலைமையின்போது வழங்க வேண்டிய முதலுதவி தொடர்பிலும் இதன்போது மக்கள் தௌிவுபடுத்தப்பட்டனர். இதன்பின்னர், காலி - பத்தேகம பிரதேசத்தை சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், பத்தேகம கோனபுர பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற தௌிவுபடுத்தலில் கலந்துகொண்டனர். வௌ்ளத்தின்போது எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் தௌிவுபடுத்தப்பட்டனர். அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு இயக்கத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பிர்சான் ஹநீம் இதில் கலந்துகொண்டிருந்தார். இலங்கை பொலிஸார், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் தமது ஒத்துழைப்புக்களை நல்கினர். வௌ்ளப்பெருக்கின்போது பாதுகாப்பாக செயற்படுவது குறித்து, இலங்கை உயிர் பாதுகாப்பு சங்கத்தினர் செயன்முறை விளக்கமளித்தனர். களுத்துறை மாவட்டத்தின் பனாபிடிய, தெபுவன மற்றும் மதுராவல ஆகிய பகுதிகளில் நாளைய தினம் இந்த தௌிவூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. https://www.youtube.com/watch?v=oRQ2cGXwBT0