இலங்கை பிரஜைகள் 131 பேர் மலேசியாவில் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த 131 இலங்கை பிரஜைகள் மலேசியாவில் கைது

by Staff Writer 06-05-2018 | 2:43 PM
COLOMBO (News 1st) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நோக்கிப் பயணித்த 131 இலங்கை பிரஜைகள், மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எட்ரா எனும் படகில், 98 ஆண்களும், 24 பெண்களும், 4 சிறுவர்களும் 5 சிறுமிகளும் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது. கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகில் இவர்கள் அவுஸ்திரேலியா அல்லது நியூஸிலாந்து நோக்கி பயணித்துள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆட்கடத்தல் நடவடிக்கை தொடர்பில் 4 இலங்கைப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஏ.ஜே.எம். முஸம்மிலிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. இந்த விடயம் தொடர்பில் வௌிவிவகார அமைச்சு இன்று மாலை அறிக்கையொன்றை வௌியிட்டது. இந்த 131 இலங்கையர்களில், 127 பேர் அந்நாட்டு குடிவரவு சட்டத்தை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது அந்நாட்டு குடிவரவு தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவிலுள்ள 43 பேரிடம், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை காணப்படுவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் அவற்றை வௌியிடுவதாகவும் வௌிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=Oyvrdc2wf1k