தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்: இந்தியா சம்பியனானது

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்: இந்தியா சம்பியனானது

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்: இந்தியா சம்பியனானது

எழுத்தாளர் Staff Writer

06 May, 2018 | 4:46 pm

COLOMBO (News 1st) மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இந்தியா ஒட்டுமொத்த சம்பியனானது.

போட்டிகளை நடத்திய இலங்கை பதக்கப்பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடித்தது.

நவீனமயப்படுத்தப்பட்ட சுகததாச விளையாட்டரங்கில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் இன்று நிறைவடைந்தது.

மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் இலங்கையின் டில்ஷி குமாரசிங்க போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்

800 மீற்றர் தூரத்தைக் அவர் 02 நிமிடங்கள் 7.78 செக்கன்களில் கடந்தார்.

ஆடவருக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் இலங்கையின் தினூஷ கருணாரத்ன தங்கப்பதக்கம் வென்றார்.

போட்டியை அவர் ஒரு நிமிடம் 53.35 செக்கன்களில் கடந்தார்.

ஆடவருக்கான 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய பசிந்து கொடிகார போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

போட்டியை அவர் 52 .56 செக்கன்களில் பூர்த்தி செய்தார்.

இதேவேளை விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்ற மகளிருக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியின் முதல் மூன்று இடங்களையும் இலங்கை வீராங்கனைகள் தனதாக்கிக் கொண்டனர்.

24.70 செக்கன்களில் போட்டியை கடந்த அமாஷா டி சில்வா தங்கப்பதக்கத்தை வென்றார்.

சர்மிளா ஜேன் மற்றும் செலிந்தா ஜென்சன் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை தனதாக்கிக் கொண்டனர்.

இலங்கை குழாத்தின் ஒட்டுமொத்த தலைவராக செயற்பட்ட அருண தர்ஷன ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

அதற்காக அவர் 21.50 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

இதனிடையே மகளிருக்கான நான்கு தர 400 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியில் இலங்கை குழாம் போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வெற்றிக் கொண்டது.

இலங்கை குழாம் போட்டித்தூரத்தை 3 நிமிடங்கள் 43.31 செக்கன்களில் கடந்தது.

அனைவரது எதிர்ப்பார்ப்பையும் விஞ்சியிருந்த ஆடவருக்கான நான்கு தர 400 மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியிலும் இலங்கை குழாமின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது.

இந்திய வீரர்கள் சவால் விடுத்த போதிலும் அந்த சவாலை லாவகமாக முறியடித்த அருண தர்ஷன உள்ளிட்ட குழாம் போட்டியை 03 நிமிடங்கள் மற்றும் எட்டு இரண்டு செக்கன்களில் கடந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது.

20 தங்கம் 22 வெள்ளி 8 வெண்கலப்பதக்கங்களை வென்ற இந்திய தொடரில் ஒட்டுமொத்த சம்பியனானது.

12 தங்கம் 10 வெள்ளி 19 வெண்கலப்பதக்கங்களை வென்ற இலங்கை பதக்கப்பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடித்தது.

பாகிஸ்தான் பதக்கப்பட்டியலில் மூன்றாமிடத்தைப் பிடித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்