வௌ்ளத்திற்கு முன் ஆயத்தமாவோம்

வௌ்ளத்திற்கு முன் ஆயத்தமாவோம்: இரத்தினபுரி, மாத்தறையில் தௌிவூட்டல் திட்டம் ஆரம்பம்

by Bella Dalima 05-05-2018 | 8:59 PM
Colombo (News 1st) வௌ்ளம் காரணமாக கடந்த வருடம் மாத்திரம் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். சொத்துக்கள், பயிர் நிலங்கள், இயற்கை வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் மிகவும் அதிகம். வௌ்ளத்தினால் ஏற்படும் உயிர் சேதங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள முடியுமா? இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது நியூஸ்ஃபெஸ்ட் மக்கள் சக்தி திட்டம். வௌ்ளத்திற்கு முன் ஆயத்தமாவோம் என்ற தொனிப்பொருளில், மக்கள் சக்தி இந்த புதிய திட்டத்தை இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று ஆரம்பித்தது. இடர் முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு இயக்கம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவும் இந்த திட்டத்துடன் ஒன்றிணைந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் இரத்தினபுரி - எலபாத்த பிரதேசம் பாதிக்கப்பட்டது. பருவ மழை ஆரம்பித்ததை அடுத்து அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளில் இரத்தினபுரி - எலபாத்த பிரதேசமும் ஒன்றாகும். மீண்டும் அனர்த்தமொன்று ஏற்பட்டால் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் இன்று காலை அப்பகுதி மக்களுக்கு தௌிவூட்டப்பட்டது. எலபாத்த, திமியாவ சனசமூக நிலையத்தில் கூடிய மக்களுக்கு வௌ்ளம் ஏற்படும் போது எவ்வாறு பாதுகாப்பை பெறுவது என்பது தொடர்பில் பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் செயன்முறை விளக்கங்களுடன் தௌிவூட்டினர் அத்துடன், மக்கள் சக்தி குழுவினர் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு இயக்கத்தின் அதிகாரிகளும் மக்களை தௌிவுபடுத்தினர்.. இரத்தினபுரி மாவட்டத்தின் பட்டுகெதர பிரதேசத்தில் மற்றுமொரு தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நேஷன் ட்ரஸ்ட் வங்கியின் அதிகாரிகளும் இதன்போது இணைந்துகொண்டதுடன், அனர்த்தங்களின் போது அழிவடைந்த வங்கி ஆவணங்களை மீள புதுபித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர்கள் மக்களைத் தௌிவுபடுத்தினர். அனர்த்தங்களின் பின்னர் வர்த்தகம் மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வாறு திரும்புவது என்பது தொடர்பில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவன அதிகாரிகள் வழங்கிய தௌிவூட்டல்களுக்கு மக்கள் தமது நன்றியைத் தெரிவித்தனர். வௌ்ளத்திற்கு முன் ஆயத்தமாவோம் திட்டத்திற்கு இரத்தினபுரி பிரதேச செயலகம், இரத்தினபுரி பொலிஸ் தலைமையகம், பெல்மடுல்ல பிரதேச செயலகம், எலபாத்த பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் சிறப்பான ஒத்துழைப்பை நல்கின. இரத்தினபுரி உயிர் பாதுகாப்புக் குழுவினர் மற்றும் பொலிஸ் உயிர் பாதுகாப்புக் குழுவினர் செயன்முறை விளக்கங்களை வழங்கினர். இரத்தினபுரி மாவட்டத்திற்கான மூன்றாவது செயலமர்வு மாரப்பன ஷாஸ்த்திரோதய பிரிவெனவில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. மாத்தறை மாவட்டத்தின் மூன்று பிரதேசங்களில் வௌ்ளத்திற்கு முன் ஆயத்தமாவோம் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாத்தறை - கந்துவ - சிறிவர்தனாராம விஹாரையில் முதற்கட்ட தௌிவூட்டல் நடவடிக்கைகள் இடம்பெற்றன. வௌ்ளத்தின் போது உயிரைக் காப்பாற்றிக்கொள்வது தொடர்பான தௌிவூட்டல்களுக்கு மேலதிகமாக அவசர சிகிச்சை தொடர்பிலும் மக்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மாகதுர புஷ்பாராம விஹாரையில் இரண்டாவது செயலமர்வு நடைபெற்றது. இதன்போது இடர் முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு இயக்கத்தினர் மக்கள் சக்தி குழுவினருடன் இணைந்து மக்களைத் தௌிவூட்டினர். ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் பொலிஸ் உயிர் பாதுகாப்பு குழுவினரும் ஒத்துழைப்பு வழங்கினர். மாத்தறை மாவட்டத்திற்கான மூன்றாவது கட்ட தெளிவூட்டல் நடவடிக்கை மொரவக்க கனேகொட ரஜமகா விஹாரையில் இன்று மாலை நடைபெற்றது. காலி மாவட்டத்தின் நெலுவ, பத்தேகம மற்றும் வெலிவிட திவிதுர ஆகிய பிரதேசங்களில் நாளைய தினம் (06) இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் பனாபிட்டிய, தெபுவன மற்றும் மதுராவல ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களை மற்றுமொரு குழுவினர் நாளை தௌிவூட்டவுள்ளனர்.