பேஸ்புக் ஊடாக நிதி மோசடிகள் அதிகரிப்பு

பேஸ்புக் ஊடாக நிதி மோசடிகள் அதிகரிப்பு

by Bella Dalima 05-05-2018 | 4:15 PM
Colombo (News 1st)  பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி தகவல் அவசர பதிவுத்தளம் அறிவித்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கடந்த சில தினங்களில் மாத்திரம் ஆறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி தகவல் அவசர பதிவுத் தளத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரோசான் சந்திரகுப்த தெரிவித்தார். இந்த முறைப்பாடுகளுக்கு அமைய, 20 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பேஸ்புக்கில் நண்பர்களாகி ஒரு சில மாதங்களில் பிரத்தியேக குறுந்தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும் சிலர் இவ்வாறான மோசடியில் ஈடுபடுவதாகவும் ரோசான் சந்திரகுப்த கூறினார். தாம் வௌிநாட்டில் வசிப்பதாகக் கூறி இலங்கையிலுள்ளவர்களுக்கு பரிசுப்பொதிகளை அனுப்புவதாகவும் அதற்கான பற்றுச்சீட்டுக்களுக்கான மாதிரிகளும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் பின்னர் பரிசுகளை சுங்கப் பிரிவினூடாகப் பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறி மோசடியில் ஈடுபடுவதாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. எனவே, பேஸ்புக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்துமாறு இலங்கை கணினி தகவல் அவசர பதிவுத்தளத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரோசான் சந்திரகுப்த வலியுறுத்தினார்.