பால் தேனீருக்கான விலை அதிகரிக்கப்பட மாட்டாது

பால் தேனீருக்கான விலை அதிகரிக்கப்பட மாட்டாது

by Bella Dalima 05-05-2018 | 3:28 PM
Colombo (News 1st)  பால் மாவிற்கான விலை அதிகரிக்கப்பட்டாலும் பால் கலந்த தேனீருக்கான விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், பால் தேனீரின் தரம் தொடர்பில் சிக்கல் ஏற்படக்கூடும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் குறிப்பிட்டார். சிற்றுண்டிச்சாலைகளில் 20 ரூபாவிற்கும் ஹோட்டல்களில் 40 ரூபாவிற்கும் பால் தேனீர் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறினார். ஒரு கிலோகிராம் நிறையுடைய பால் மாவின் விலை 50 ரூபாவால் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 கிராம் நிறையைக்கொண்ட பால் மா பக்கெட் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான பால் மா மற்றும் கொழுப்பற்ற பால் மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது சந்தையில் விற்பனைக்குள்ள பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது எனவும், மே மாதம் 5 ஆம் திகதி முதல் உற்பத்தி செய்யப்படும் பால் மாவிற்கு மாத்திரம் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.