ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 05-05-2018 | 9:18 PM
Colombo (News 1st)  ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை: ஜனாதிபதி தெரிவிப்பு ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மீண்டும் வலியுறுத்திக் கூறினார். பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சர்வதேச பொது சுகாதார தின நிகழ்வு பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் ஜனாதிபதியின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி கூறியதாவது,
ஜனாதிபதி செயலகத்தின் செயலணி பிரதானி என்ற பதவி அமைச்சின் செயலாளர் பதவிக்கு ஒப்பானது. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். எமது நாட்டில் மூன்று ஜனாதிபதிகளுக்காக இந்தப் பதவியிலிருந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் கைது செய்யப்பட்ட அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் செயலணி பிரதானியாவார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலணிப் பிரதானி சில மாதங்களுக்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட எனது அலுவலகத்தின் செயலணி பிரதானி சேவையில் இணைந்து ஒரு மாதம் கூட பூர்த்தியாகவில்லை. இதுவே உண்மை நிலைமை. ஏன் இவ்வாறு இடம்பெறுகின்றது? மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் ஒருபோதும் செயற்படலாகாது. அமைச்சராகவிருந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியாக பொறுப்பேற்று இந்த மூன்றரை வருடங்களிலும் நான் மிகவும் தெளிவாக இலஞ்சம், ஊழல், மோசடி, திருட்டு, அரச சொத்தை முறைகேடாக பயன்படுத்தல் தொடர்பில் பாகுபாடின்றி தீர்மானங்களை மேற்கொண்டுள்ளேன். இந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய விடயங்கள் தொடர்பிலும் நான் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளேன். ஸ்ரீ லங்கன் விமான சேவையின் ஊழலை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ளேன். அந்த ஆணைக்குழுவும் நாளை, நாளை மறுதினமளவில் மிக முக்கிய தகவல்களை நாட்டிற்கு வெளியிடும்.