விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கம்

இலங்கை வீரர்களுக்கு உரிய தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காததால் விளையாட்டுத்துறை பணிப்பாளர் பதவி நீக்கம்

by Bella Dalima 05-05-2018 | 4:26 PM
Colombo (News 1st)  விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் H.M.B.P. ஹேரத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று ஆரம்பமாகியுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொள்ளும் இலங்கை வீரர்களுக்கு உரிய முறையில் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமையால் அவரை பதவி நீக்கம் செய்யுமாறு அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர், தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 84 இலங்கை வீரர்களும், 15 ஆலோசகர்களும் கலந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு டொரிங்டன் பகுதியிலுள்ள விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான விடுதியில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறித்த விடுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் வீரர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சிக்கலை நிவர்த்தி செய்வதற்கு விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையால், அமைச்சரின் தலையீட்டுடன் வீரர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.