by Bella Dalima 05-05-2018 | 9:35 PM
Colombo (News 1st)
3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் முதல் நாளில் இலங்கை 5 தங்கப்பதக்கங்களை வெற்றி கொண்டது.
3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகின.
ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இலங்கையின் தரிந்து தசுன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
போட்டியில் அவர் 2.04 மீற்றர் உயரத்திற்கு திறமையை வெளிப்படுத்தினார்.
வெள்ளிப்பதக்கத்தை இந்திய வீரரும் வெண்கலப்பதக்கத்தை இலங்கையின் எஸ்.டி அமரசிங்கவும் பெற்றனர்.
இலங்கை மகளிர் அணியின் தலைவியான அமாஷா டி சில்வா 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
போட்டியை அவர் 11.92 செக்கன்ட்களில் கடந்தார்.
வெள்ளிப் பதக்கத்தை இந்திய வீராங்கனை வெற்றிகொள்ள, இலங்கையின் ஷெலின்டா ஜக்ஸன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
மகளிருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் இலங்கையின் டில்ஷி குமாரசிங்க தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
அதற்காக அவருக்கு 54.47 செக்கன்ட்கள் சென்றதுடன் இது புதிய போட்டி சாதனையாகும்.
ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் இலங்கை வீரர்கள் கைப்பற்றினர்.
இலங்கை குழாத்தின் தலைவரான அருன தர்ஷன புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.
போட்டியை அவர் 46.55 செக்கன்ட்களில் நிறைவு செய்தார்.
பி.எல்.கொடிகார வெள்ளிப் பதக்கத்தையும், கே.கே. பிரஹாஷ்வர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
மகளிருக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை குழாம் தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டது.
போட்டியை பூர்த்தி செய்ய அவர்கள் 46.23 செக்கன்ட்களை எடுத்தனர்.
வெள்ளிப் பதக்கம் இந்திய குழாம் வசமாக, வெண்கலப் பதக்கம் பங்களாதேஷ் குழாத்திற்குக் கிட்டியது.