ஜனாதிபதி செயலக பிரதானி, அரச மரக்கூட்டுத்தாபனத் தலைவருக்கு விளக்கமறியல்
by Bella Dalima 04-05-2018 | 9:43 PM
Colombo (News 1st)
ஜனாதிபதி செயலகத்தின் செயலணியின் பிரதானி கலாநிதி ஐ.கே. மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பியசேன திசாநாயக்க ஆகியோரை உடனடியாக சேவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (03) உத்தரவிட்டார்.
அவர்களுக்கு எதிராக எவ்வித தயக்கமுமின்றி சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் செயலணியின் பிரதானி கலாநிதி ஐ.கே. மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பியசேன திசாநாயக்க ஆகியோர் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று கைது
செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக அரசாங்கத்தின் நிலையான கொள்கையை நடைமுறைப்படுத்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் இந்த சம்பவத்தின் ஊடாக உறுதி செய்யப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச அதிகாரிகள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீன மற்றும் பக்கசார்பற்ற பின்புலம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.