13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுகிறது

13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுகிறது

by Bella Dalima 04-05-2018 | 4:11 PM
Colombo (News 1st)  நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 6 மாவட்டங்களில் அதிகளவில் அபாய நிலைமை காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிச்சரிதவியல் பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். இதன் காரணமான மழை பெய்யும் போது மண்சரிவு தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கூறினார். பதுளை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை,காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மணிசரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மலைப்பாங்கான இடங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ​தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. 24 மணித்தியாலங்களுக்கு 150 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பத்தில் மண்சரிவு அபாயம் எற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதுளை ஹல்தமுல்ல தொடக்கம் கினிகத்கல வரையான வீதியை அண்மித்த பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுகின்றது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. தற்போது சுமார் நான்கு ஏக்கர் காணி மண்சரிவிற்குள்ளாகியுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக குறித்த பகுதியிலிருந்த சிலர் வௌியேற்றப்பட்டுள்ளனர். மேலும், ஹல்தமுல்ல தொடக்கம் கினிகத்கல வரையான வீதி மூடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. குறித்த வீதியை அண்மித்து வாழும் மூன்று கிராமங்களில் உள்ள 600 க்கும் மேறபட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றும் குறித்த பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழும் அபாயம் நிலவுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.