Colombo (News 1st)
கிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் 2000 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை தொண்டராசிரியராகப் பணியாற்றியவர்கள், 2007 ஆம் ஆண்டு அப்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரமவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.
ஆசிரியர் வெற்றிடத்தினை அடிப்படையாகக் கொண்டு கட்டம் கட்டமாக தொண்டராசிரியர்களுக்கு கிழக்கில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
எனினும், 445 தொண்டராசிரியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
நிரந்தர நியமனம் வழங்கப்படாத தொண்டராசிரியர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டது.
எனினும், இந்த நேர்முகத் தேர்வுக்கு 1050 பேர் தோற்றியதாக பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் கூறினர்.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு தொண்டராசிரியர்கள் வருகை தந்தபோதிலும் அலுவலகத்தில் ஆளுநர் இன்மையால் சந்திப்பு இடம்பெறவில்லை என பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை எனவும், பெயர்ப்பட்டியலை இன்று நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.