ஹல்துமுல்லயில் மண் சரிவு

ஹல்துமுல்லயில் மண் சரிவு: இரத்தினபுரி- பதுளை வீதியில் பயணிப்போர் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

by Bella Dalima 03-05-2018 | 8:39 PM
Colombo (News 1st)  பதுளை - ஹல்துமுல்ல, வல்ஹபுதென்ன, கினிகத்கல வீதியை அண்மித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் குறித்த பகுதியில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. இன்று அதிகாலை நிலைமை மோசமடைந்துள்ளதுடன், பிரதேசத்தின் நான்கு ஏக்கர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக ஹல்துமுல்லயிலிருந்து கினிகத்கல பகுதி வரையான வாகனப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. அபாய நிலைமை காரணமாக இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மண்சரிவு காரணமாக கிரிமெட்டிய, நிதன்கொட, கினிகத்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீதியின் கீழ் பகுதியில் பதுளை - இரத்தினபுரி பிரதான வீதி அமைந்துள்ளதுடன், அந்த வீதியிலும் மண் மேடு சரிந்து வீழும் அபாயம் நிலவுகிறது. மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்திலேயே பதுளை - இரத்தினபுரி பிரதான வீதி அமைந்துள்ளது. இன்றைய தினமும் மழை பெய்தால் பிரதான வீதியின் மீது மண் மேடுகள் சரிந்து வீழும் அபாயம் உள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். அபாய நிலைமை தொடர்பில் மக்களுக்கு தௌிவுபடுத்தும் வகையில் பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது. அபாய நிலைமை அதிகரித்தால் இந்த வீதியூடான வாகனப் போக்குவரத்தை முற்றாக இடைநிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகார சபையின் பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் கூறினார்.